Showing posts with label Kavithai கவிதை. Show all posts
Showing posts with label Kavithai கவிதை. Show all posts

Friday, June 25, 2010

கண்ணாடிக் கூட்டிலிருந்து எறியப்படும் கற்கள்




பத்தில் போர்த்திய ஆடைக்கு
பதினெட்டு யன்னல் வைத்து 
இருபதில் உடுப்பவள் 
பெண்ணியம் பேசுகிறாள், 
அங்கம் மறைத்து ஆடை அணிவது 
அடக்குமுறையாம்...

கடைசிக் காதலியை கைவிட்டவன் 
களவை மறைக்க
காரணம் சொன்னான், 
காதலிக்கு கள்ளத் தொடர்பாம்...

பெண்ணைக் கொடுக்க
சீதனம் கசக்குது 
பெண்ணை எடுக்க 
சீதனம் இனிக்குது 
அடங்கிப் போவது பெண்மையாம்...
அடக்கிப் போடுவது ஆண்மையாம்...

பொன்னையும் பெண்ணையும் 
துறக்கச் சொல்லி,
பொன்னில் வீடும் 
பெண்ணில் படுக்கையும் 
செய்வது 
ஆன்மீகத்தின் ஓர் அங்கமாம்
அது ஆசையின் அடிமைத் தனம் 
அல்லவாம்...

ஆயுதம் விற்பது 
அரச அலுவல் 
ஆளைக் கொள்வது 
உரிமை மீறல் 
வல்லரசுக்கு வக்கிர புத்தி 
இல்லவே இல்லையாம்...

பயங்கரவாதத்தை 
பகிரங்கமாய் எதிர்த்து 
பகிரங்க இரகசியமாய்
பயங்கரம் செய்வது,
இராஜதந்திர காய் நகர்த்தலாம்... 
அதுவே அந்நாட்டின் இறைமையாம்...

கண்டதைச் சொல்லி 
சொன்னதை முடிக்கு முன் 
என் கண்ணாடிக் கூட்டிலும் 
கண்டேன் கற்களை,
உண்மை கசப்பது 
உண்மை தானே ....!!!





Wednesday, June 2, 2010

முதல் காதல்...!!!




மொட்டை முந்தி எட்டிப் பார்க்கும்
தந்திரமான இதழாய் 
மனதை மெதுவாய் எட்டியது
மறக்கத் தெரியாத முதல் காதல்...


நண்பர்கள் நச்சரிக்கும் காதல் கதைகளில் 
நானும் ஒரு பாத்திரமேற்க
நான் நினைத்தது உன்னைத் தான் 
என் கற்பனைக் காதலியாக...


பள்ளி விட்டு வரும் போது 
பசி மறந்த ஒரே இடம்
உன் வீட்டு படிக்கட்டு தான்...
பார்வைகள் உன் மீது விழுந்த போது 
உள்ளுக்குள் பாடியது 
"தேவதையை கண்டேன் 
காதலில் விழுந்தேன் "
என்ற வரிகளைத் தான்...


களவெடுத்த குறிப்புப் புத்தகத்தில் 
முத்துப் போல் முகம் காட்டிய 
மதி மயக்கும் எழுத்துக்களை 
மதி மயங்கி எழுதிப் பார்த்தது 
மனத் திரையில் ஓடுகிறது 
பேனா பிடிக்கும் போதெல்லாம்...


பார்வைகளைப் பறிப்பதற்காய் 
நீ நடக்கும் பாதைகளில் 
நிரந்தரமான வழிப்போக்கனானேன்
வழிதவறிய என் புத்தியால்...


இரகசியத்திலும் இருவரும் 
பிரியக் கூடாதென்ற பைத்தியத்தில் 
கடவுச்சொல்லிளும் கலந்தேன் 
நம்மிருவர் பெயரையும்...


பட்டப் படிப்பிற்காய் நீ பறந்த போது
சிறகுடைந்த உன் நினைவுகள் 
பறக்கத் தெரியாமல் பற்றியது 
பகுத்தறியாத என் மனதை...
உலக நாட்கள் உருண்டோட 
நினைவுகளோ உருளவில்லை 
உள்மனதின் உயிரை விட்டு...


அன்றொரு நாள் அந்திப் பொழுது 
வீட்டு மேசையில் வீற்றிருந்த 
திருமண அழைப்பிதழை அணுகவே...
சொல்லாமல் செத்துப் போன 
சத்தமற்ற காதல் கதையொன்று 
சங்கடத்துடன் அடங்கியது 
சஞ்சலமுற்ற இதய சமாதியிலே...!!!    

முளைத்த முதல் காதல், மொழிய முன் முடிவுற்ற இதயங்களிற்கு, இது ஒரு சமர்ப்பணம்...



Thursday, May 27, 2010

அத்துமீறிய ஆசை..!!!

கானல் நீரைக் கண்டது 
கள்ள மனம் இங்கு கதறுது...
அருகே சென்றால் மாயம் என்று 
மறந்து போய் அது மயங்குது ...!

அத்து மீறிய கண்கள் இரண்டும்
அந்நிய பாதச் சுவடுகள் தொடருது ...
அழிந்த சுவடுகளின் சுவட்டைக் காண 
கூர்ந்து பார்த்து அது குனிகிறது ...!

எட்டாக் கனிக்கு எட்டி எட்டி 
எலும்பு முறிவுகள் கண்டது ...
வலியின் வழியில் வந்த ஆசை
எட்டச் சொல்லி மறுபடி அழைக்கிறது ...!

உப்பின் உவர்ப்பிற்கு உணர்வற்ற 
கடல் மீன் கொண்ட கண்கள் போல...
கண்ணீர் காயம் கண்ட கண்கள் 
கண்ணீரில் மிதக்க துடிக்குது ...!

நேற்று நடந்த பாதையில் நடந்தும் 
வளைவுகள் ஒன்றும் பழக்கமில்லை...
மோதி மோதி மறுத்த உடம்பில் 
மோதல் மீதொரு பயமும் இல்லை...!

துயரை துணையாய் ஏன் கொண்டாய் ???
உள்மனம் என்னை கேட்கிறது ...
மறுகணம் அதுவே அதிகாரமாய் 
பதிலாய் கேள்விகள் தொடுக்கிறது ...

மின்னொடும் ஒரு கம்பியில் 
மின்னதிர்வும் ஓர் வதையா ???

சில்லென சுழலும் சடப்பொருளும்
சேறு பட்டால் அழுதிடுமா ???

வானில் பறக்கும் ஒரு பறவை 
வெயிலின் வெப்பத்தில் வியர்த்திடுமா ???

உடைந்த இதயம் தொடர்ந்து துடிக்க 
காலில் குத்திய முள் வலித்திடுமா ???

கட்டான கேள்விகள் எடை கனக்க 
புத்தி மட்டும் கனியவில்லை ...
சளைக்காமல் விட்டது சட்டென ஒரு பதிலை 
"மௌனம்" எனும் ஒற்றை வார்த்தையில் ...!!!

"யாவும் கற்பனை"

என் முதல், பதிவு எட்டாத பொருள் மீது வற்றாத பற்று கொண்ட உள்ளங்களிற்கு ஒரு சமர்ப்பணம்...!!!