Wednesday, June 2, 2010

முதல் காதல்...!!!




மொட்டை முந்தி எட்டிப் பார்க்கும்
தந்திரமான இதழாய் 
மனதை மெதுவாய் எட்டியது
மறக்கத் தெரியாத முதல் காதல்...


நண்பர்கள் நச்சரிக்கும் காதல் கதைகளில் 
நானும் ஒரு பாத்திரமேற்க
நான் நினைத்தது உன்னைத் தான் 
என் கற்பனைக் காதலியாக...


பள்ளி விட்டு வரும் போது 
பசி மறந்த ஒரே இடம்
உன் வீட்டு படிக்கட்டு தான்...
பார்வைகள் உன் மீது விழுந்த போது 
உள்ளுக்குள் பாடியது 
"தேவதையை கண்டேன் 
காதலில் விழுந்தேன் "
என்ற வரிகளைத் தான்...


களவெடுத்த குறிப்புப் புத்தகத்தில் 
முத்துப் போல் முகம் காட்டிய 
மதி மயக்கும் எழுத்துக்களை 
மதி மயங்கி எழுதிப் பார்த்தது 
மனத் திரையில் ஓடுகிறது 
பேனா பிடிக்கும் போதெல்லாம்...


பார்வைகளைப் பறிப்பதற்காய் 
நீ நடக்கும் பாதைகளில் 
நிரந்தரமான வழிப்போக்கனானேன்
வழிதவறிய என் புத்தியால்...


இரகசியத்திலும் இருவரும் 
பிரியக் கூடாதென்ற பைத்தியத்தில் 
கடவுச்சொல்லிளும் கலந்தேன் 
நம்மிருவர் பெயரையும்...


பட்டப் படிப்பிற்காய் நீ பறந்த போது
சிறகுடைந்த உன் நினைவுகள் 
பறக்கத் தெரியாமல் பற்றியது 
பகுத்தறியாத என் மனதை...
உலக நாட்கள் உருண்டோட 
நினைவுகளோ உருளவில்லை 
உள்மனதின் உயிரை விட்டு...


அன்றொரு நாள் அந்திப் பொழுது 
வீட்டு மேசையில் வீற்றிருந்த 
திருமண அழைப்பிதழை அணுகவே...
சொல்லாமல் செத்துப் போன 
சத்தமற்ற காதல் கதையொன்று 
சங்கடத்துடன் அடங்கியது 
சஞ்சலமுற்ற இதய சமாதியிலே...!!!    

முளைத்த முதல் காதல், மொழிய முன் முடிவுற்ற இதயங்களிற்கு, இது ஒரு சமர்ப்பணம்...



3 comments:

Anonymous said...

கலக்கல் கவிதை.. வாழ்த்துக்கள்

M. Azard (ADrockz) said...

மிக்க நன்றி :)

elamthenral said...

முதல் காதல் என்றுமே மறக்கமுடியாத தருணங்களில் ஒன்றாகி, வெற்றிபெற்றால் சுகமான வாழ்க்கை அமையும், இல்லையெனில் அந்த காதல் நம்முள்ளே புதைந்துவிடும்.