Saturday, October 8, 2011

விழி மூடினால்... விடியாது...!!!


சில்லால் மிதிக்காமல்
சீராகும் பாதையேது...
வெப்பத்தில் வாடினாலும்
தன் ஆயுளைக் கூட்டும் கருவாடு...

மழை நீரை நம்பி
வாழும் வாழ்வில் சரிவிருக்கு...
சரி பார்த்து குறிவைத்தால்
மண்ணுக்குள் ஊற்றிருக்கு...

தனிமையும் வெறுமையும்
உயிரை ஊடுருவி வாட்டலாம்...
தனியே ஓடும் வண்டியின்
வேகத்தை மறக்கலாமா...

சில காதல் பல மோதல்
வாழ்வில் வந்து போகலாம்...,
தென்றல் வந்து முத்தமிட்டு
மறு நொடியே முகம் திருப்ப,
அந்த மலைமேடு மடிந்து போகலாமா...

கடலில் எடுத்த மண்
காயும் போது கனம் குறையும்...
நெஞ்சில் கொஞ்சம் ஈரம் குறைய
வாழ்வும் இங்கு இலேசாகும்...

பனித்துளிகள் வந்து படிய
இதழ்கள் கொஞ்சம் சரிந்தாலும்...,
பூவாசனை என்றும்
நீரில் கரைந்து போகாது...

வீழ்ச்சி கண்டு விழி மூடினால்
விடியல் என்றும் கனவே...
கூசும் ஒளியிலும் கண்திறக்கும்
குழந்தை வாழ்வு குதூகலமே...!!!




Tuesday, July 19, 2011

சில... பேசாத நிஜங்கள்...

பிச்சைக்காரி பிரசவித்தால்
மழலையும் தொழில் செய்திடும்...
அழுதழுது உழைத்தால் தான்
அதன் வயிறு நிரம்பிடும்...

வறுமை கொண்ட மங்கைக்கு
உடலோன்றே ஒரு முதலா...?
சதை புசிக்கும் ஆணுக்கேல்லாம்
சாதி பேதம் ஒரு தடையா...?

தப்புகளும் தர்மமாகும்
சூழ்நிலை எனும் வேதமிருந்தால்...
அநீதியும் நீதியை ஈன்றெடுக்கும்
பேச்சில் மயக்கும் மருந்திருந்தால்...

காதலெனும் திரையணிந்தால்
கனவிலும் ஒரு கலை  தெரிந்திடும்...
தோல்வி தரும் காயமெல்லாம்
மறு துணையின் தூதில் மறைந்திடும்....

எவன் கண்ணும் கன்னியில்லை...
எவள் மனதும் பத்தினியில்லை...
பாவத்தை  தள்ளித் தவழ,
எவரும் இங்கு குழந்தையில்லை...

பேசாத நிஜங்கள்
பேசாமல் நிஜமாகும்...
அகராதியில் அதன் பெயர்
"யதார்த்தம்" என பதிவாகும்...!




Saturday, February 12, 2011

நிலவுடன் ஒரு கனவு...!!!

அனுமதி கேட்கா வந்த அறிமுகங்கள்
விடை பெறாது தொடரும் உறவுகள்
ஒருகணப் பிரிவிலும் ஒட்டும் ஏக்கங்கள்,
என்றும் விடை தேடும்..., சில கவிதைகள்...

வேலி போட்ட ஓடையை
வேடிக்கை பார்க்கும் ஒட்டகமாய்,
இரவை மறந்து பயணிக்கும்
விளக்கில்லா வாகனப் பயணமாய்,
எனக்கில்லா உன்னோடு
என் இனிய தருணங்கள்...

தூறல் தரும் மழையும்
தூசி போடும் வெயிலும்,
பேசித் தீர்க்கும் பொழுதுகளின்
வானிலையை மட்டும் மாற்றாதிருக்க...,
இல்லாத மொழிக்கும்
சொல்லாத பாஷைக்கும்
இலக்கணங்கள் தேடியே
விடியும் பல பொழுதுகள்...

சொல்லில் செய்யும் ஏளனமும்
செயலில் கலக்கும் வன்முறையும்,
பூ வாசனை ஏந்திய முற்களாய்
மூக்கையும் முகத்தையும் குத்த...,
கொஞ்சலையும் கெஞ்சலையும்
ஒற்றையாய் ரசிக்கும்,
முள் வாசனை உணர்ந்த
தனியொரு இதயம்...


நாட்களின் சுழற்சியில்
வானிலையும் மாறலாம்.....
விடியும் பொழுதொன்றில்
விடைபெறும் பொழுதும் இணையலாம்.....
வாசனையை உதிர்ந்த முற்கள்
இதயத்தையே தைக்கலாம்.....
அந்நாள் வரை.......,
வேடிக்கை... பயணம்... தேடல்...
ஒன்றாய் தொடரும்.....