Friday, June 25, 2010

கண்ணாடிக் கூட்டிலிருந்து எறியப்படும் கற்கள்




பத்தில் போர்த்திய ஆடைக்கு
பதினெட்டு யன்னல் வைத்து 
இருபதில் உடுப்பவள் 
பெண்ணியம் பேசுகிறாள், 
அங்கம் மறைத்து ஆடை அணிவது 
அடக்குமுறையாம்...

கடைசிக் காதலியை கைவிட்டவன் 
களவை மறைக்க
காரணம் சொன்னான், 
காதலிக்கு கள்ளத் தொடர்பாம்...

பெண்ணைக் கொடுக்க
சீதனம் கசக்குது 
பெண்ணை எடுக்க 
சீதனம் இனிக்குது 
அடங்கிப் போவது பெண்மையாம்...
அடக்கிப் போடுவது ஆண்மையாம்...

பொன்னையும் பெண்ணையும் 
துறக்கச் சொல்லி,
பொன்னில் வீடும் 
பெண்ணில் படுக்கையும் 
செய்வது 
ஆன்மீகத்தின் ஓர் அங்கமாம்
அது ஆசையின் அடிமைத் தனம் 
அல்லவாம்...

ஆயுதம் விற்பது 
அரச அலுவல் 
ஆளைக் கொள்வது 
உரிமை மீறல் 
வல்லரசுக்கு வக்கிர புத்தி 
இல்லவே இல்லையாம்...

பயங்கரவாதத்தை 
பகிரங்கமாய் எதிர்த்து 
பகிரங்க இரகசியமாய்
பயங்கரம் செய்வது,
இராஜதந்திர காய் நகர்த்தலாம்... 
அதுவே அந்நாட்டின் இறைமையாம்...

கண்டதைச் சொல்லி 
சொன்னதை முடிக்கு முன் 
என் கண்ணாடிக் கூட்டிலும் 
கண்டேன் கற்களை,
உண்மை கசப்பது 
உண்மை தானே ....!!!





Monday, June 21, 2010

கனவாக ஒரு காதல் ...

(உண்மைக் கதையொன்றைத் தழுவி எழுதப்பட்டது, பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன...!!!)



களைப்பான நாளொன்றைக் கடந்து கண்ணயர கட்டிலில் சாய்ந்தேன்...
தலைக்குப் பக்கத்திலிருந்த கைப்பேசி சிறிய ஒலியுடன் சிணுங்கியது. ஒரு புதிய இலக்கம், புதிராக "ஹலோ" என்றேன்.
"ஹலோ" எதிரில் ஒரு பெண்குரல்...
"யாரு பேசுறீங்க?"...
"நீங்க ரோஷன் தானே?" மீண்டும் அதே பெண்குரல் ...
"ஆமா, நீங்க யாரு?"...
"என்ன ரோஷன்... என்ட வாய்ஸ் மறந்துட்டீங்களா ?"...

   சும்மா சொல்லக் கூடாது. அந்தக் குழந்தைப் பேச்சில் உள்ளமும் கொஞ்சம் குலைந்தது. பதிலின்றி உள்ளம் பட படக்க மௌனம் வார்த்தைகளை ஆக்கிரமித்தது. மௌனத்தை முந்தி வார்த்தைகளைச் சுரக்க எத்தனித்த வேளை மீண்டும் அவளே பேசினாள்...
"சரி அத விடுங்க... உங்க results என்ன?"
(அட சொல்ல மறந்துட்டேன். அது என் உயர்தர பெறுபேறுகள் வெளிவந்த மறுநாள்)

"நீங்க யாருன்டு தெரியாம எப்படி நான் results சொல்றது?" நான் கேட்டேன்...
"அப்போ நீங்க சொல்ல மாட்டீங்க தானே, OK நல்லா யோசிச்சுப் பாருங்க, நான் யாரு என்டு தெரியும்" 
சொல்லி மறுகணம் தொடர்பை துண்டித்து விட்டாள்.
   
   தொடர்பைத் துண்டித்து விட்டு மனதில் தூண்டிலிட்டு விட்டாள் என்ற ஏக்கம் ஒரு புறமிருக்க "அவள் யார்" என்ற சந்தேகம் புத்தியெங்கும் புதிராய் எதிரொலித்தது. ஏக்கமும் புதிரும் கலந்து கண்ணயர்வதை கட்டுப்படுத்தினாலும் களைப்பு கண்களை கட்டாயப் படுத்தி மூட வைத்தது.
கனவுகள் கடந்து காலையில் விழித்த போதும் கடைசி இரவின் குழப்பம் குறையாமல் அப்படியே இருந்தது. 

   அந்தக் குழப்பத்தில் அவள் யார் என அடையாளம் காண எனக்குப் பட்ட ஒரே வழி அவளின் கைப்பேசி இலக்கத்தை வைத்து அவளைக் கண்டு பிடிப்பது தான். உடனே Call Centre ல் வேலை பார்க்கும் நண்பனிற்கு அழைப்பை ஏற்படுத்தி குறித்த இலக்கத்தின் உரிமையாளரரின் ஊர், பெயர்களைப் பெற்றுக் கொண்டேன். 
   உரிமையாளர் ஓர் ஆணாக இருந்தாலும் எனக்கு முகவரியில் கண்ட ஊரைப் பார்த்தவுடன் பளிச்சென உள்ளத்தில் பட்டது "ஷர்மி" தான்.

   ஆம்,  அவள் என் நண்பனின் காதலியின் தோழி. படிக்கும் காலங்களில் நண்பனின் காதல் சந்திப்புகளிற்கு கூடச் செல்லும் போது அவனின் காதலியுடன் துணைக்கு வந்த இவளுடன் ஒரு சில சந்திப்புகள் மூலம் அறிமுகம் உண்டு. கைப்பேசி இலக்கங்களைப் பரிமாறி இடையிடையே Good morning, Good night .. குறுஞ்செய்திகளைப் பரிமாறியதில் அறிமுகம் நட்பாக வளர்ந்தது. காலப் போக்கில் பரீட்சை நெருங்கவே படிப்பு, வகுப்புகள் என காலம் கழிய இயல்பாகவே நட்புப் பரிமாறல்கள் மெல்ல மெல்ல இறந்து போயின. அப்படியே உயர்தரப் பரீட்சையும் முடிந்தது. அதன்பின் அவளை ஓரிரு தடவைகள் அழைக்க முயன்ற போதெல்லாம் எதிர் தரப்பில் "subscriber cannot be reached" என்ற பதிலே வந்தது. இது தான் அவளுக்கும் எனக்கும் உள்ள அறிமுகம்.


   இப்படியே அவளின் பழைய நினைவுகள் கண் முன்னே கடந்து செல்ல மதியப் பொழுதின் வெப்பத்திலும் உள்ளத்தில் குளிராக குழப்பங்கள் குடி கொண்டிருந்தது.
   
   திடீரென  கைப்பேசி சிணுங்கியது. அதிசயம், ஆம் அது அவளே தான். அந்தக் கணத்தில் வியப்பும் மகிழ்வும் கலந்து வந்த உணர்ச்சி என்னை "துள்ளிக் குதி" என்று தூண்டுவதாக இருந்தது.


"ஹலோ" அதே மென்மையான குரலில் அவளே சொன்னாள்.
"இப்பயாவது நான் யார் என்டு கண்டு பிடிச்சுட்டீங்களா ?" தொடர்ந்து கேட்டாள்..
இந்தக் குரலைக் கேட்டவுடன் அவள் ஷர்மியே தான் என உள்ளம் உறுதியாய் நின்றது.


"நீ..ங்..க.. ஷர்மி தானே.."
நான் தயக்கம் கலந்த அடக்கத்துடன் வார்த்தைகளை அப்படியே கொட்டினேன்.


"அட கண்டு பிடிச்சுட்டீங்களே.. அப்போ நீங்க இன்னும் என்ன மறக்கல்ல தானே.." 
என அவள் கொஞ்சிய போது தான் நான் மணிக்கணக்கில் மனதினுள் கொண்ட ஏக்கமும் தயக்கமும் தணிந்து மகிழ்வின் களிப்பு மட்டும் ஒற்றையாய் உடலெங்கும் உருண்டோடியது. இதற்கு முன் அவளிடம் பேசும் போது வராத ஓர் இனம்புரியாத உணர்வு உள்ளத்தை வன்மை கலந்த மென்மையுடன் வருடிச் சென்றது.


   அன்று தொடங்கிய தொலைபேசி தொடர்பாடல்கள் நீண்ட நாள் தொலைந்திருந்த நட்பை தொடுப்பதாகத் தொடங்கி நாளுக்கு நாள் நிகழும் சிறு சிறு விடயங்களை எல்லாம் பகிருமளவுக்கு வளர்ந்தது. 
   எதையும் விட்டு வைக்காமல் எல்லா விடயங்களையும் என்னுடன் பகிர்வது, அவளின் அன்பு, அரவணைப்பு , ஆதரவு என எல்லாம் என் நட்பை காதல் என வளர்த்து விட்டாலும், நட்பெனும் போர்வையில் என் காதலை நகர்த்திக் கொண்டிருந்தேன்.


   நாட்கள் நகர நட்பின் போர்வைக்குள் சுருண்டிருக்க முடியாத காதல் கொஞ்சம் கொஞ்சம் வெளியே எட்டிப் பார்க்கத் தொடங்கியது. எட்டிப் பார்ப்புகள் அவள் மனதையும் எட்டவே இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதற்குப் பின் அப்படியே வழமையான காதலர்களைப் போலவே இடை விடாத கைப்பேசி அரட்டைகள், இடையிடையே சந்திப்புகள் என சிறிது காலத்திற்கு நாட்கள் சுமுகமாக நகர்ந்தன.  


   உண்மையில் இது எனக்கு பக்குவமடைந்த வயது வந்த பின் முளைத்த முதல் காதல். ஆனால் பருவ வயதில் உதித்து பக்குவமடைய முன் மறைந்த காதல் அனுபவம் ஒன்று எனக்கு உண்டு. அவளுக்கும் காதலா, நட்பா எனத் தெரியாத ஒரு உறவு ஏற்கனவே இருந்து இப்போது அறுந்து போனதாக என்னிடம் சொல்லி இருக்கிறாள். அவன் பெயர் கமால். இதுவே அவன் பற்றி எனக்கு அவள் தந்த ஒரே அறிமுகம். 
 ஆனால் என் காதலுக்கு திரும்பவும் அவன் குறுக்காக வருவான் என நான் கனவிலும் நினைத்ததேயில்லை. ஆனால் என்ன செய்ய, எல்லாம் விதி ...




ஆம்... ஒரு விடுமுறை நாள் அந்திபோளுதில் திடீரென அவளின் அழைப்பு வந்தது...


"ஹலோ .. ரோஷன்.. கமால் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கார், இண்டைக்கு தான் வந்தாராம், எனக்கு இப்ப தான் call எடுத்து பேசினார்"
   இப்படி அவள் ஒரே மூச்சில் இன்பமும் ஆச்சரியமும் கலந்த பாணியில் சொல்லி முடித்த போது உண்மையில் எனக்கும் வியப்பாகவே இருந்தது. நானும் என்னை சுதாகரித்துக் கொண்டு ஒரு சில வார்த்தைகளை பேசி விட்டு கைபேசியை வைத்து விட்டேன்.
   உரையாடல்கள் முடிந்தாலும் உண்மையில் அப்போது என் புத்திக்கும் உள்ளத்திற்கும் இடையில் சந்தேகத்தின் சக்கரங்கள் மாறி மாறி சுழன்றன. காரணம் அவனுடன் தொடர்பே இல்லை என சொன்னவள் திடீர் என இப்படி அவன் அழைப்பெடுத்து கதைத்ததாக சொன்னது தான். 


"தொடர்பே இல்லை என்றால் , ஏன் call எடுத்திருக்கான்????"
   அந்த நிலைமையில் என்னைப் போட்டுக் குழப்பிய சந்தேகம் அது தான். ஆனால் அவளிடம் அதை நேரடியாக கேட்கும் தைரியமும் எனக்கு வரவில்லை. எங்கே அவளின் காதலை இழந்து விடுவேனோ என்ற ஒரு பயமாகக் கூட இருக்கலாம். அந்த நிலைமையில் அது நியாயமான சந்தேகமா இல்லையா என எனக்குத் தெரியவில்லை, ஆனால் நாட்கள் கழிய சந்தேகத்தின் நியாயத் தன்மையும் கூடியது..


 அவளிடம் பேசும் போதெல்லாம் எதோ அவனை அதிகம் முக்கியப் படுத்தி பேசுவதே அவள் வழக்கமாக மாறியது. ஏதாவது நான் கேள்விகள் கேட்டால் கோபப்படுவது, அதுக்கப்புறம் நானே போய் சமாதானம் செய்வது, இப்படி விரிசல்கள் எம்மத்தியில் விரியத் தொடங்கியது. இவை அனைத்தும் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்திய போதும் அவள் மனமதில் அவன் முதலிடம் பெறுவதை எனக்குத் தெளிவாக கோடிட்டு காட்டியது. 


   விரிசல்கள் எடை கணக்க காதலும் கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கியது. நாளுக்கு நான்கைந்து தடவைகள் அழைத்து பேசும் அவள் ஒரு அழைப்பு எடுப்பது கூட அதிசயமாக மாறியது. என் அழைப்புகளும் பதிலின்றி முடிந்தது. இடையில் எப்போதாவது அழைத்து அவள் பக்கம் உள்ள குறைகளை மறைக்க நியாயம் காட்ட முற்படுவாள். அந்த நேரங்களில் அவளை ஆமோதிப்பதைத் தவிர வேறு வழிகள் எனக்குத் தெரிவதேயில்லை. காரணம், அவளின் காதல் என்னைக் கட்டிப் போட்டு விட்டது. அவள் நினைவுகள் கனவிலும் என்னைத் துரத்திக் கொன்று கொண்டே இருக்கின்றன. 


   அவள் அவனைக் காதலிக்கிறாளோ இல்லையோ என எனக்குத் தெரியாது, ஆனால் அவள் என்னைக் காதலிக்கவில்லை என்பது மட்டும் எனக்குத் தெளிவாகப் புரிகிறது, 
என்னை விட அவளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடியவன் யாராகத் தான் இருக்க முடியும் .....???....


(அனுபவத்தை கதையாகப் பிரசுரிக்க அனுமதி தந்த நண்பனிற்கு நன்றிகள்)




Tuesday, June 15, 2010

பேஸ்புக்கில் வலம் வரும் போலி முகங்கள்

   
   இணையப் பயணர்களின் இணை பிரியாத பங்காளி தான் இந்த பேஸ்புக் (Facebook) எனப்படும் சமூக வலைத் தளம். இணையத்தைப் பயன்படுத்தும் பாக்கியம் பெற்ற ஒவ்வொருவருக்கும் அநேகமாக இங்கு ஒரு கணக்கு இருக்கும். (இல்லாதவர்களும் இருக்கிறார்கள்). நாளுக்கு நாள் இதன் அங்கத்தவர்கள் பெருக, கூடவே இந்தத் தளம் சம்பந்தமான சர்ச்சைகளும் பெருகிக் கொண்டே வருகிறது. இருந்தாலும் 24x7 ஆன்லைன் (online) ஆசாமிகளின் ஆட்டம் இருக்கும் வரை இந்தத் தளம் சக்கை போடு போடும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. சரி இனி தலைப்பிற்கு வருவோம். 


   இவ்வாறான Fake Profiles எனப்படும் போலி முகங்கள் இணையத்தில் தாராளமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இப்போலிகள் பேஸ்புக்கையும் விட்டு வைக்கவில்லை. இது சம்பந்தமான நான் அறிந்த அனுபவ ரீதியான விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன். 


   இலங்கையைப் பொருத்தமட்டில் இப்போலி கணக்குகள் அதிகம் ஆண்களாலேயே உண்டாக்கப் படுகின்றன. (பெண்களுக்கு போலிக் கணக்குகள் இல்லை என்று சொல்ல வரவில்லை). 


   பொதுவாக பெண்கள் முகம்தெரியாத ஆண்களிடமிருந்து வரும் Friend Request களை Accept பண்ணுவதில்லை. ஆனால் இதே ஒரு முகம்தெரியாத பெண்ணாக இருந்தால் அவர்கள் அவ்வளவாக சிந்திப்பதில்லை. ஆனால் இவ்வாறு பெண்களின் பெயர்களாலேயே ஆண்கள் அதிகம் போலிக் கணக்குகளை வைத்திருப்பதை இவர்கள் அறியாமல் இருக்கலாம். ஒரு சில சூட்சுமமான ஆசாமிகள் ஒரு படி மேல் சென்று போலியாக உண்மையான ஒரு பெண்ணின் பெயரை வைத்தே போலிக் கணக்கை உண்டாக்கின்றனர். இதனால் அந்தப் பெண்களைச் சார்ந்தவர்களுடன் இந்தப் போலி ஆசாமிகள் இலகுடன் தொடர்புகளை உண்டுபண்ண சந்தர்ப்பம் கிட்டுகிறது. எனவே பெண்களே உஷார்...!!! 


   அடுத்ததாக இவ்வாறு பெண்கள் பெயர்களில் உண்டாக்கப்படும் போலிக் கணக்குகளால் இவர்கள் ஆண்களையும் ஏமாற்றுகின்றனர். பெண்களின் பெயரில் Request வந்தால் பாய்ந்து சென்று அதை Accept பண்ணும் நபர்களே இதன் மூலம் அதிகம் ஏமாற்றப்படுகின்றனர். ( எனக்கு தெரிந்த ஒரு நபர் இவ்வாறு ஒரு போலிக் கணக்கினால் ஏமாற்றப் பட்டு குறித்த அந்தக் கணக்கை வைத்திருக்கும் நபரின் கைப்பேசிக்கு ஆயிரக்கணக்கான ரூபாக்களை மீள்நிரப்பி (Reload) விஷயம் தெரிந்த பின் கை சேதப் பட்டது வேறு கதை )


சரி இனி இவ்வாறான போலிக் கணக்குகளிலிருந்து தவிர்ந்து கொள்ள எனக்கு தெரிந்த சில முறைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்;

  • ஆண்களோ பெண்களோ சரி, யாராவது தெரியாத பெயர்களிடமிருந்து Request வந்தால் உஷாராகி விடுங்கள். அந்தக் கணக்கின் பின்னணியை தேடுங்கள். உண்மையான Profile Pic போடப்பட்டுள்ளதா என கவனியுங்கள். (சிலர் உண்மையான வேறு நபர்களின் படங்களை கொண்டும் போலிக் கணக்குகளை உருவாகின்றனர்.)
  • குறித்த கணக்கில் எதாவது ஆபாச ரீதியான வாசகங்கள் அல்லது படங்கள் இருந்தால் கொஞ்சம் உன்னிப்பாக இருங்கள். எந்த நபரும் தன் ஆபாச நிலைகளை படம் போட்டு காட்ட விரும்புவதில்லை.
  • பெண்களே, உங்கள் தோழியின் பெயரிலும் போலிக் கணக்குகள் உருவாக்கப் படலாம். இந்த ஆசாமிகள் சூட்சுமமாக பொதுவான நண்பர்கள் (Mutual Friends) பட்டியலைக் கூட்டிக் கொண்டு உங்களுக்கு Request கொடுக்கலாம்.ஆகவே எதாவது சந்தேகம் தோன்றினால் குறித்த உங்கள் நண்பிக்கு அழைப்பை எடுத்து உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
  • ஆண்களே, தெரியாத பெண்கள் பெயரில் வரும் Request களை உடனே ஏற்றுக் கொள்ள வேண்டாம். (உங்கள் மனதை கொஞ்சம் கட்டிப் போடுங்கள் :P) 
  • உங்கள் நண்பர்களின் பெயரிலேயே போலிக் கணக்குகள் காணப்படுவதால் சந்தேகங்கள்  ஏற்படும் சந்தர்பங்களில் குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி உறுதி செய்து கொள்ளுங்கள்.



இவ்வாறான கணக்குகளை இனங்காண எனக்குத் தெரிந்த சில முறைகள்:

  • குறிப்பாக இந்தக் கணக்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள் இருப்பார்கள். அதிலும் அதிகம் ஆண்களே இருப்பார்கள். கொஞ்சம் சிந்தியுங்கள், ஒரு பெண்ணுக்கு பெண்களை விட அதிகம் ஆண் நண்பர்கள், அதுவும் ஆயிரத்தையும் தாண்டி.. உஷார் ..!!! 
  • ஆபாசமான படங்கள் காணப்படும். அதிலும் அந்த ஆபாசமான படங்களிற்கு கொடுக்கப் பட்டிருக்கும் ஆபாசமான பின்னூட்டல்களிற்கு (comments) அந்த நபரும் சிரித்துக் கொண்டே பதில் சொல்லி இருப்பார்.
  • குறித்த கணக்கின் Profile, இலகுவான பாதுகாப்பு நிலைமைகளைக் கொண்டிருக்கும். அதாவது அக்கணக்கின் சுவரை (wall) யாருக்கும் பார்க்கலாம், நண்பர் இல்லாவிடினும்.
  • குறிப்பாக சிலர் உண்மையான படங்கள் இல்லாததனால் அதிகம் குழந்தைகளின் படங்களைப் பகிர்ந்து கொண்டே இருப்பார். (தான் பெண் என்று நிரூபிக்க :P) 
  • பொதுவாக Looking for, Interested in பகுதிகளில் எல்லா தெரிவுகளையும் தெரிவு செய்து இருப்பார். (குறிப்பாக Looking for a relationship)
  • அடிக்கடி கொஞ்சம் அப்புடி இப்படியான Pages, Groups களில் இணைவாங்க. 
  • அதோட கொஞ்சம் கவர்ச்சியான யாரோ ஒருத்தரின் படங்களை தன் படம் என்று பகிந்து கொள்வாங்க. (இதுக்குப் போய் சில அப்பாவிப் பசங்க Hai, u r soooo beautiful என்று சொல்லும் கொடுமை இருக்கே... அப்பா சொல்லிப் பிரயோசனம் இல்லை :D) 



முக்கிய குறிப்பு: இவ்வாறான தன்மை கொண்ட எல்லா கணக்குகளும் போலி என்று சொல்லி விட முடியாது. இப்படியான தன்மைகளுடன் உண்மையான கணக்குகளை வைத்திருப்பவர்கள் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பிரபல நபர்களின் Wall, நண்பர் இல்லாவிடினும் பார்க்கக் கூடிய பாதுகாப்பு தன்மையையே கொண்டிருக்கும். (Open to Everyone) 


அது சரி இவ்வளவு சொல்லும் என் கணக்கிலேயே ஐந்திற்கும் மேற்பட்ட போலி ஆசாமிகள் குந்தி இருக்கிறார்கள். ஏன் இன்னும் தூக்காம இருக்கிறேன் என்று கேக்குறீங்களா..? பதிவிட அவர்களின் தொழிற்பாடுகளைப் பற்றி அனுபவம் இருக்க வேண்டும் தானே...! :D


(இங்கு வாசிப்பவரின் இலகு கருதி தேவையான இடங்களில் ஆங்கில சொற்களைப் பயன்படுத்தி உள்ளேன். பேஸ்பூக்கிற்கு மூஞ்சிப் புத்தகம் அல்லது முகநூல் என்று தமிழாக்கம் செய்வதில் இஷ்டமில்லை. Yahoo, Google, Orkut... இதுக்கெல்லாம் தமிழாக்கம் கேட்டா வில்லங்கம் தானே...:P




Saturday, June 5, 2010

நடிப்பின்றி நாமில்லை

   நாகரீகம் கடந்து நவீனத்தை தொட்ட மனிதன் நடிப்பை மட்டும் புறந்தள்ளவே இல்லை. சொல்லிக் கொடுத்ததை நடிக்கும் சினிமாக்காரர்களைப் பற்றி நான் இங்கு பேச வரவில்லை. சந்தர்ப்பத்தின் பெயரிலோ, நிர்ப்பந்தத்தின் பெயரிலோ ... இல்லை சுயநலத்திற்காகவோ, பொதுநலத்திற்காகவோ போலிப் போர்வைகளை போர்த்திக் கொண்டு பாரினை வலம் வரும் ஒவ்வொரு மானிடனும் நடிகன் தான். ( உலகம் ஒரு நாடக மேடை என்று சும்மாவா சொன்னாங்க..?)
   
   நாலு நாள் சுகத்திற்க்காக காதலைக் காட்டும் காதலன்... பணத்தைக் கறக்க காதலைச் சுரக்கும் காதலி... இது போன்ற வக்கிர புத்தி கொண்ட சுயநலங்களே நடிப்பென்று நீங்கள் நினைத்தால் இந்தப் பதிவு உங்களுக்கு மிகவும் பொருந்தும். 
   
   பல நாள் கதைக்காமல் திடீர் என்று சந்தித்த நண்பரைப் பார்த்து "Phone No miss ஆகிட்டு ", "Call எடுத்தன் answer இல்ல", "வீட்டுக்கு வந்தன், கதவு பூட்டி இருந்தது".. போன்ற காரணங்களை காட்டி நட்பை காக்கும் நிர்ப்பந்தத்தில் நீங்கள் நடிததில்லையா ???
   கண்டும் காணாதது போல போன சொந்தங்கள் திடீர் என்று உங்களின் சுகம் விசாரிப்பதாய் நடித்து அவர்களின் காரியங்களுக்கு உங்களிடம் உதவி வாங்கியதில்லையா ??? இல்லை நீங்கள் தான் அப்படி செய்ததே இல்லையா ??? 
  நீங்கள் இல்லை என்று தலை அசைத்தாலும் உள்மனது எத்தனயோ "ஆம்" களைச் சொல்லும். 
   
   சில போது நிர்ப்பந்தங்கள் மனிதனை நடிக்குமாறு கட்டாயப் படுத்துவது யார் வித்தித்த விதியோ தெரியவில்லை... 
சதையை விற்று சந்தோசத்தை கொடுக்கும் விலைமகள் கூட நடிக்கிறாள், வறுமையின் வதை தாங்காமல்...,
ஏன், தொழில் இல்லாதவன் பிச்சைக்காரனாய் நடிக்கிறான், வயிற்றுப் பசியின் கொடூரம் தாங்காமல்,...
   
   இதையெல்லாம் தாண்டி இன்னும் நீங்கள் "நாம் எல்லோரும் நடிக்கிறோம்" என்பதை ஏற்க மறுக்கிறீர்களா ???
 சங்கடமான சந்தர்ப்பங்களில் உங்கள் கைத் தொலைபேசியின் பொத்தானை போலியாக அழுத்துவது ஒரு நடிப்பில்லையா ?
தமிழில் பேசிக் கொண்டிருந்த நீங்கள் நாலு பேர் கடப்பதைக் கண்டவுடன் போலியாக ஆங்கிலம் பேசுவதும் ஒரு நடிப்பில்லையா ?
இல்லை, ஆறுயிராய் வேண்டப்பட்ட ஒருவர் உங்களை குறுக்கிட திடீர் என போலிப் பணிவை காட்டுவது தான் நடிப்பில்லையா ???
   எல்லாம் நடிப்பு தான், நல்லதோ கெட்டதோ , நாம் நடிக்கத்தான் செய்கிறோம். இதில் நானோ நீங்களோ விதிவிலக்குகள் அல்ல. 


"என்னடா, முளைச்சு மூணு கொழுந்து விடல்ல , இதெல்லாம் பேசுறான்" 
என்று நினைக்காதீங்க.
   
   கடைசியா ஒரு விஷயத்த சொல்லிட்டு போகிறேன். அண்மையில் கேட்ட ஒரு பாடல் வரி யாபகத்திற்கு வருகிறது. 
"நடிக்காத ஒரே தெய்வம் அம்மா தானடா " 
( தாயை நான் நேசிப்பவன், ஆனால் தாயை தெய்வத்திற்கு சமனாக்கும் கொள்கை எனக்கில்லை )
   ஈரக்கண்ணை கசக்கிக் கொண்டு பொய்யாக ஒரு சிரிப்பைக் காட்டி, ஈன்ற குழந்தையின் வலியைப் போக்க எத்தனை முறை அவள் நடித்திருப்பாள். இந்தச் சுயநலமற்ற நடிப்பை அவளால் தான் செய்ய முடியும்.
   
   இது தான் வாழ்வின் இயல்பு. வேஷத்தை நம்பும் இவ்வுலகில் சில சமயங்களில் நம்மை நாமே தோலுரித்துக் காட்டினால் தொனியிழந்து போவோம். 
   அது தான், "நடிப்பின்றி நாமில்லை" 
நடிப்போம் ... சுயநலமின்றி, பொதுநலம் காத்துக்கொண்டு, தன்நலம் பேணிக் கொண்டு...!!!



Wednesday, June 2, 2010

முதல் காதல்...!!!




மொட்டை முந்தி எட்டிப் பார்க்கும்
தந்திரமான இதழாய் 
மனதை மெதுவாய் எட்டியது
மறக்கத் தெரியாத முதல் காதல்...


நண்பர்கள் நச்சரிக்கும் காதல் கதைகளில் 
நானும் ஒரு பாத்திரமேற்க
நான் நினைத்தது உன்னைத் தான் 
என் கற்பனைக் காதலியாக...


பள்ளி விட்டு வரும் போது 
பசி மறந்த ஒரே இடம்
உன் வீட்டு படிக்கட்டு தான்...
பார்வைகள் உன் மீது விழுந்த போது 
உள்ளுக்குள் பாடியது 
"தேவதையை கண்டேன் 
காதலில் விழுந்தேன் "
என்ற வரிகளைத் தான்...


களவெடுத்த குறிப்புப் புத்தகத்தில் 
முத்துப் போல் முகம் காட்டிய 
மதி மயக்கும் எழுத்துக்களை 
மதி மயங்கி எழுதிப் பார்த்தது 
மனத் திரையில் ஓடுகிறது 
பேனா பிடிக்கும் போதெல்லாம்...


பார்வைகளைப் பறிப்பதற்காய் 
நீ நடக்கும் பாதைகளில் 
நிரந்தரமான வழிப்போக்கனானேன்
வழிதவறிய என் புத்தியால்...


இரகசியத்திலும் இருவரும் 
பிரியக் கூடாதென்ற பைத்தியத்தில் 
கடவுச்சொல்லிளும் கலந்தேன் 
நம்மிருவர் பெயரையும்...


பட்டப் படிப்பிற்காய் நீ பறந்த போது
சிறகுடைந்த உன் நினைவுகள் 
பறக்கத் தெரியாமல் பற்றியது 
பகுத்தறியாத என் மனதை...
உலக நாட்கள் உருண்டோட 
நினைவுகளோ உருளவில்லை 
உள்மனதின் உயிரை விட்டு...


அன்றொரு நாள் அந்திப் பொழுது 
வீட்டு மேசையில் வீற்றிருந்த 
திருமண அழைப்பிதழை அணுகவே...
சொல்லாமல் செத்துப் போன 
சத்தமற்ற காதல் கதையொன்று 
சங்கடத்துடன் அடங்கியது 
சஞ்சலமுற்ற இதய சமாதியிலே...!!!    

முளைத்த முதல் காதல், மொழிய முன் முடிவுற்ற இதயங்களிற்கு, இது ஒரு சமர்ப்பணம்...



Tuesday, June 1, 2010

ஏன்டா இவனுக இப்படி ???

   என்னடா இவன்... ஏதாவது மொக்கை போடப்போறானா ??? என்று தலைப்பை பார்த்தவுடனேயே நினைக்குறீங்களா ??? பரவாயில்லை, தொடர்ந்து வாசியுங்க ...

   அண்மையில் பதிவாளர் (Blogger) நண்பர் ஒருவரை சந்தித்தேன் . கொஞ்சம் நெருங்கிய நண்பரும் கூட. அப்படியே வழமை போல எம் அரட்டை தொடங்கியது . நாட்டு நடப்புகள் அப்படி இப்படி என்று நகர்ந்த எங்கள் பேச்சு வலைப்பூக்கள், பேஸ்புக் (Facebook) போன்ற இணையம் சார்ந்த தலைப்புகளுக்குள் சென்றது. அப்படியே பேசிக்கொண்டிருந்த அவன் தன் ஆதங்கத்தை சொல்லத் தொடங்கினான். இதோ அவனின் வார்த்தைகளியே பதிகிறேன்...

"டேய், Blog லயும் சரி Facebook லயும் சரி , நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு சுயமா Post பண்ணினாலோ இல்ல Status Update பண்ணினாலோ எந்தப் பொடியனும் ஒரு Comment கூட போட மாட்டானுங்கடா, ஆனா இந்தப் பொண்ணுங்க போடுற மொக்கையான Status களுக்கெல்லாம் அள்ளி அள்ளி Comments குடுப்பானுங்கடா " என்று தன் உள்ளத்தில் உறைந்த ஆதங்கத்தை உளறிக் கொட்டினான்.
நானும் பதிலுக்கு கொஞ்சம் சீரியசாகவே "அது சரி, பொடியங்க தான் அப்படின்னா, இந்தப் பொண்ணுங்க உனக்கு போடுதுகளா?" எனக் கேட்டேன்.
அதுக்கு அவனும் "அத ஏண்டா கேக்குறாய், அவங்க அந்தப் பக்கமும் பார்க்க மாட்டாங்க "
என்று சலிப்புடன் சொல்லி விட்டு மௌனமாகிட்டான்.

   ஐயோ ..!!! இவன் இந்த மொக்கைய சொல்லவா இவ்வளவு அலட்டினான் என்று நீங்க என்னைப் பார்த்து சொல்லுறது விளங்குது .. என்ன செய்ய ...
அநேக புது முக பதிவாளர்களின் ஆதங்கமும் இது தானாம்...!!!