Sunday, May 30, 2010

ஏன் இந்த வலைப்பூ ???


  நீண்ட நாட்களாக வலைப்பூ (Blog) ஒன்றை தொடங்குவதற்காக ஆசை. ஆனால் தொடங்கலாம் ... தொடருமா??? என்ற உறுத்தல்  இருந்தே வந்தது. பல நாள் யோசனைக்குப் பின் மனதில் உதித்த முடிவின் விளைவே இந்த தமிழ் வலைப்பூ. தமிழில் வேறு ஆங்கிலத்தில் வேறு என இரு வேறு வலைப்பூக்களை நடாத்த திட்டமிட்டுள்ளேன். தாய் மொழிக்கே முதலிடம், ஆகவே முதல் கட்ட பதிவுகளை தமிழிலேயே பதிகிறேன். விரைவில் ஆங்கில வலைப்பூவும் நிறுவப்படும். 

 சுவாரஸ்யமான, சுற்றி நடக்கின்ற மற்றும் சமூகம் சார்ந்த விடயங்களை அலட்டாமல் அலசுவதே இந்த வலைப்பூவின் நோக்கம். அது பல்வேறு வித்தியாசமான  தலைப்புகளின் கீழ் அமையும். இடையிடையே கவிதைப் பதிவுகளும் இடம்பெறும். இப்படி நிறைய கனவுகளுடன் என் சிந்தனைகளை சிதற விடுகிறேன்... அள்ளிக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது . கனவுகளை நனவாக்குவதில் உங்கள் பங்கும் இன்றியமையாதது.

 இந்த வலைத்தள உருவாக்கத்தில் இரண்டு நட்புள்ளங்களிற்கு  நன்றி சொல்லியே ஆக வேண்டும். இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் தந்து என்னை ஊக்கப்படுத்தினார்கள். இதற்கு மேலும் உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை. Mohamed Shifan, Shihnas Ahamed. இவர்களே அந்த இருவரும் .
 
கடைசியாக , 
தொடருங்கள் என் பதிவுகளை ; பதியுங்கள் உங்கள் கருத்துகளை. (Follow பண்ணுங்க ; Comment போடுங்க ) 
"வலைப்பூவில் வசந்தங்கள் தொடரும் இனிதே ...."




Thursday, May 27, 2010

அத்துமீறிய ஆசை..!!!

கானல் நீரைக் கண்டது 
கள்ள மனம் இங்கு கதறுது...
அருகே சென்றால் மாயம் என்று 
மறந்து போய் அது மயங்குது ...!

அத்து மீறிய கண்கள் இரண்டும்
அந்நிய பாதச் சுவடுகள் தொடருது ...
அழிந்த சுவடுகளின் சுவட்டைக் காண 
கூர்ந்து பார்த்து அது குனிகிறது ...!

எட்டாக் கனிக்கு எட்டி எட்டி 
எலும்பு முறிவுகள் கண்டது ...
வலியின் வழியில் வந்த ஆசை
எட்டச் சொல்லி மறுபடி அழைக்கிறது ...!

உப்பின் உவர்ப்பிற்கு உணர்வற்ற 
கடல் மீன் கொண்ட கண்கள் போல...
கண்ணீர் காயம் கண்ட கண்கள் 
கண்ணீரில் மிதக்க துடிக்குது ...!

நேற்று நடந்த பாதையில் நடந்தும் 
வளைவுகள் ஒன்றும் பழக்கமில்லை...
மோதி மோதி மறுத்த உடம்பில் 
மோதல் மீதொரு பயமும் இல்லை...!

துயரை துணையாய் ஏன் கொண்டாய் ???
உள்மனம் என்னை கேட்கிறது ...
மறுகணம் அதுவே அதிகாரமாய் 
பதிலாய் கேள்விகள் தொடுக்கிறது ...

மின்னொடும் ஒரு கம்பியில் 
மின்னதிர்வும் ஓர் வதையா ???

சில்லென சுழலும் சடப்பொருளும்
சேறு பட்டால் அழுதிடுமா ???

வானில் பறக்கும் ஒரு பறவை 
வெயிலின் வெப்பத்தில் வியர்த்திடுமா ???

உடைந்த இதயம் தொடர்ந்து துடிக்க 
காலில் குத்திய முள் வலித்திடுமா ???

கட்டான கேள்விகள் எடை கனக்க 
புத்தி மட்டும் கனியவில்லை ...
சளைக்காமல் விட்டது சட்டென ஒரு பதிலை 
"மௌனம்" எனும் ஒற்றை வார்த்தையில் ...!!!

"யாவும் கற்பனை"

என் முதல், பதிவு எட்டாத பொருள் மீது வற்றாத பற்று கொண்ட உள்ளங்களிற்கு ஒரு சமர்ப்பணம்...!!!