Monday, June 21, 2010

கனவாக ஒரு காதல் ...

(உண்மைக் கதையொன்றைத் தழுவி எழுதப்பட்டது, பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன...!!!)



களைப்பான நாளொன்றைக் கடந்து கண்ணயர கட்டிலில் சாய்ந்தேன்...
தலைக்குப் பக்கத்திலிருந்த கைப்பேசி சிறிய ஒலியுடன் சிணுங்கியது. ஒரு புதிய இலக்கம், புதிராக "ஹலோ" என்றேன்.
"ஹலோ" எதிரில் ஒரு பெண்குரல்...
"யாரு பேசுறீங்க?"...
"நீங்க ரோஷன் தானே?" மீண்டும் அதே பெண்குரல் ...
"ஆமா, நீங்க யாரு?"...
"என்ன ரோஷன்... என்ட வாய்ஸ் மறந்துட்டீங்களா ?"...

   சும்மா சொல்லக் கூடாது. அந்தக் குழந்தைப் பேச்சில் உள்ளமும் கொஞ்சம் குலைந்தது. பதிலின்றி உள்ளம் பட படக்க மௌனம் வார்த்தைகளை ஆக்கிரமித்தது. மௌனத்தை முந்தி வார்த்தைகளைச் சுரக்க எத்தனித்த வேளை மீண்டும் அவளே பேசினாள்...
"சரி அத விடுங்க... உங்க results என்ன?"
(அட சொல்ல மறந்துட்டேன். அது என் உயர்தர பெறுபேறுகள் வெளிவந்த மறுநாள்)

"நீங்க யாருன்டு தெரியாம எப்படி நான் results சொல்றது?" நான் கேட்டேன்...
"அப்போ நீங்க சொல்ல மாட்டீங்க தானே, OK நல்லா யோசிச்சுப் பாருங்க, நான் யாரு என்டு தெரியும்" 
சொல்லி மறுகணம் தொடர்பை துண்டித்து விட்டாள்.
   
   தொடர்பைத் துண்டித்து விட்டு மனதில் தூண்டிலிட்டு விட்டாள் என்ற ஏக்கம் ஒரு புறமிருக்க "அவள் யார்" என்ற சந்தேகம் புத்தியெங்கும் புதிராய் எதிரொலித்தது. ஏக்கமும் புதிரும் கலந்து கண்ணயர்வதை கட்டுப்படுத்தினாலும் களைப்பு கண்களை கட்டாயப் படுத்தி மூட வைத்தது.
கனவுகள் கடந்து காலையில் விழித்த போதும் கடைசி இரவின் குழப்பம் குறையாமல் அப்படியே இருந்தது. 

   அந்தக் குழப்பத்தில் அவள் யார் என அடையாளம் காண எனக்குப் பட்ட ஒரே வழி அவளின் கைப்பேசி இலக்கத்தை வைத்து அவளைக் கண்டு பிடிப்பது தான். உடனே Call Centre ல் வேலை பார்க்கும் நண்பனிற்கு அழைப்பை ஏற்படுத்தி குறித்த இலக்கத்தின் உரிமையாளரரின் ஊர், பெயர்களைப் பெற்றுக் கொண்டேன். 
   உரிமையாளர் ஓர் ஆணாக இருந்தாலும் எனக்கு முகவரியில் கண்ட ஊரைப் பார்த்தவுடன் பளிச்சென உள்ளத்தில் பட்டது "ஷர்மி" தான்.

   ஆம்,  அவள் என் நண்பனின் காதலியின் தோழி. படிக்கும் காலங்களில் நண்பனின் காதல் சந்திப்புகளிற்கு கூடச் செல்லும் போது அவனின் காதலியுடன் துணைக்கு வந்த இவளுடன் ஒரு சில சந்திப்புகள் மூலம் அறிமுகம் உண்டு. கைப்பேசி இலக்கங்களைப் பரிமாறி இடையிடையே Good morning, Good night .. குறுஞ்செய்திகளைப் பரிமாறியதில் அறிமுகம் நட்பாக வளர்ந்தது. காலப் போக்கில் பரீட்சை நெருங்கவே படிப்பு, வகுப்புகள் என காலம் கழிய இயல்பாகவே நட்புப் பரிமாறல்கள் மெல்ல மெல்ல இறந்து போயின. அப்படியே உயர்தரப் பரீட்சையும் முடிந்தது. அதன்பின் அவளை ஓரிரு தடவைகள் அழைக்க முயன்ற போதெல்லாம் எதிர் தரப்பில் "subscriber cannot be reached" என்ற பதிலே வந்தது. இது தான் அவளுக்கும் எனக்கும் உள்ள அறிமுகம்.


   இப்படியே அவளின் பழைய நினைவுகள் கண் முன்னே கடந்து செல்ல மதியப் பொழுதின் வெப்பத்திலும் உள்ளத்தில் குளிராக குழப்பங்கள் குடி கொண்டிருந்தது.
   
   திடீரென  கைப்பேசி சிணுங்கியது. அதிசயம், ஆம் அது அவளே தான். அந்தக் கணத்தில் வியப்பும் மகிழ்வும் கலந்து வந்த உணர்ச்சி என்னை "துள்ளிக் குதி" என்று தூண்டுவதாக இருந்தது.


"ஹலோ" அதே மென்மையான குரலில் அவளே சொன்னாள்.
"இப்பயாவது நான் யார் என்டு கண்டு பிடிச்சுட்டீங்களா ?" தொடர்ந்து கேட்டாள்..
இந்தக் குரலைக் கேட்டவுடன் அவள் ஷர்மியே தான் என உள்ளம் உறுதியாய் நின்றது.


"நீ..ங்..க.. ஷர்மி தானே.."
நான் தயக்கம் கலந்த அடக்கத்துடன் வார்த்தைகளை அப்படியே கொட்டினேன்.


"அட கண்டு பிடிச்சுட்டீங்களே.. அப்போ நீங்க இன்னும் என்ன மறக்கல்ல தானே.." 
என அவள் கொஞ்சிய போது தான் நான் மணிக்கணக்கில் மனதினுள் கொண்ட ஏக்கமும் தயக்கமும் தணிந்து மகிழ்வின் களிப்பு மட்டும் ஒற்றையாய் உடலெங்கும் உருண்டோடியது. இதற்கு முன் அவளிடம் பேசும் போது வராத ஓர் இனம்புரியாத உணர்வு உள்ளத்தை வன்மை கலந்த மென்மையுடன் வருடிச் சென்றது.


   அன்று தொடங்கிய தொலைபேசி தொடர்பாடல்கள் நீண்ட நாள் தொலைந்திருந்த நட்பை தொடுப்பதாகத் தொடங்கி நாளுக்கு நாள் நிகழும் சிறு சிறு விடயங்களை எல்லாம் பகிருமளவுக்கு வளர்ந்தது. 
   எதையும் விட்டு வைக்காமல் எல்லா விடயங்களையும் என்னுடன் பகிர்வது, அவளின் அன்பு, அரவணைப்பு , ஆதரவு என எல்லாம் என் நட்பை காதல் என வளர்த்து விட்டாலும், நட்பெனும் போர்வையில் என் காதலை நகர்த்திக் கொண்டிருந்தேன்.


   நாட்கள் நகர நட்பின் போர்வைக்குள் சுருண்டிருக்க முடியாத காதல் கொஞ்சம் கொஞ்சம் வெளியே எட்டிப் பார்க்கத் தொடங்கியது. எட்டிப் பார்ப்புகள் அவள் மனதையும் எட்டவே இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதற்குப் பின் அப்படியே வழமையான காதலர்களைப் போலவே இடை விடாத கைப்பேசி அரட்டைகள், இடையிடையே சந்திப்புகள் என சிறிது காலத்திற்கு நாட்கள் சுமுகமாக நகர்ந்தன.  


   உண்மையில் இது எனக்கு பக்குவமடைந்த வயது வந்த பின் முளைத்த முதல் காதல். ஆனால் பருவ வயதில் உதித்து பக்குவமடைய முன் மறைந்த காதல் அனுபவம் ஒன்று எனக்கு உண்டு. அவளுக்கும் காதலா, நட்பா எனத் தெரியாத ஒரு உறவு ஏற்கனவே இருந்து இப்போது அறுந்து போனதாக என்னிடம் சொல்லி இருக்கிறாள். அவன் பெயர் கமால். இதுவே அவன் பற்றி எனக்கு அவள் தந்த ஒரே அறிமுகம். 
 ஆனால் என் காதலுக்கு திரும்பவும் அவன் குறுக்காக வருவான் என நான் கனவிலும் நினைத்ததேயில்லை. ஆனால் என்ன செய்ய, எல்லாம் விதி ...




ஆம்... ஒரு விடுமுறை நாள் அந்திபோளுதில் திடீரென அவளின் அழைப்பு வந்தது...


"ஹலோ .. ரோஷன்.. கமால் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கார், இண்டைக்கு தான் வந்தாராம், எனக்கு இப்ப தான் call எடுத்து பேசினார்"
   இப்படி அவள் ஒரே மூச்சில் இன்பமும் ஆச்சரியமும் கலந்த பாணியில் சொல்லி முடித்த போது உண்மையில் எனக்கும் வியப்பாகவே இருந்தது. நானும் என்னை சுதாகரித்துக் கொண்டு ஒரு சில வார்த்தைகளை பேசி விட்டு கைபேசியை வைத்து விட்டேன்.
   உரையாடல்கள் முடிந்தாலும் உண்மையில் அப்போது என் புத்திக்கும் உள்ளத்திற்கும் இடையில் சந்தேகத்தின் சக்கரங்கள் மாறி மாறி சுழன்றன. காரணம் அவனுடன் தொடர்பே இல்லை என சொன்னவள் திடீர் என இப்படி அவன் அழைப்பெடுத்து கதைத்ததாக சொன்னது தான். 


"தொடர்பே இல்லை என்றால் , ஏன் call எடுத்திருக்கான்????"
   அந்த நிலைமையில் என்னைப் போட்டுக் குழப்பிய சந்தேகம் அது தான். ஆனால் அவளிடம் அதை நேரடியாக கேட்கும் தைரியமும் எனக்கு வரவில்லை. எங்கே அவளின் காதலை இழந்து விடுவேனோ என்ற ஒரு பயமாகக் கூட இருக்கலாம். அந்த நிலைமையில் அது நியாயமான சந்தேகமா இல்லையா என எனக்குத் தெரியவில்லை, ஆனால் நாட்கள் கழிய சந்தேகத்தின் நியாயத் தன்மையும் கூடியது..


 அவளிடம் பேசும் போதெல்லாம் எதோ அவனை அதிகம் முக்கியப் படுத்தி பேசுவதே அவள் வழக்கமாக மாறியது. ஏதாவது நான் கேள்விகள் கேட்டால் கோபப்படுவது, அதுக்கப்புறம் நானே போய் சமாதானம் செய்வது, இப்படி விரிசல்கள் எம்மத்தியில் விரியத் தொடங்கியது. இவை அனைத்தும் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்திய போதும் அவள் மனமதில் அவன் முதலிடம் பெறுவதை எனக்குத் தெளிவாக கோடிட்டு காட்டியது. 


   விரிசல்கள் எடை கணக்க காதலும் கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கியது. நாளுக்கு நான்கைந்து தடவைகள் அழைத்து பேசும் அவள் ஒரு அழைப்பு எடுப்பது கூட அதிசயமாக மாறியது. என் அழைப்புகளும் பதிலின்றி முடிந்தது. இடையில் எப்போதாவது அழைத்து அவள் பக்கம் உள்ள குறைகளை மறைக்க நியாயம் காட்ட முற்படுவாள். அந்த நேரங்களில் அவளை ஆமோதிப்பதைத் தவிர வேறு வழிகள் எனக்குத் தெரிவதேயில்லை. காரணம், அவளின் காதல் என்னைக் கட்டிப் போட்டு விட்டது. அவள் நினைவுகள் கனவிலும் என்னைத் துரத்திக் கொன்று கொண்டே இருக்கின்றன. 


   அவள் அவனைக் காதலிக்கிறாளோ இல்லையோ என எனக்குத் தெரியாது, ஆனால் அவள் என்னைக் காதலிக்கவில்லை என்பது மட்டும் எனக்குத் தெளிவாகப் புரிகிறது, 
என்னை விட அவளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடியவன் யாராகத் தான் இருக்க முடியும் .....???....


(அனுபவத்தை கதையாகப் பிரசுரிக்க அனுமதி தந்த நண்பனிற்கு நன்றிகள்)




4 comments:

Shi-Live said...

haaaaaaaaaaaaaaaaa........உண்மையில் இது எனக்கு பக்குவமடைந்த வயது வந்த பின் முளைத்த முதல் காதல்


Now How many????????????





அவள் அவனைக் காதலிக்கிறாளோ இல்லையோ என எனக்குத் தெரியாது, ஆனால் அவள் என்னைக் காதலிக்கவில்லை என்பது மட்டும் எனக்குத் தெளிவாகப் புரிகிறது,
thats why said dont belive girls love(majority)...i am not going to say all the girls are same....

M. Azard (ADrockz) said...

கருத்திற்கு நன்றி நண்பா... நல்ல வேல, எனக்கு இது நடக்க இல்ல,, உன் பேச்ச கேட்டதனால தான் நான் தப்பினேன் ...:D

Anonymous said...

"அவள் அவனைக் காதலிக்கிறாளோ இல்லையோ என எனக்குத் தெரியாது, ஆனால் அவள் என்னைக் காதலிக்கவில்லை என்பது மட்டும் எனக்குத் தெளிவாகப் புரிகிறது, "

உங்க நண்பன் சரியானா சமயத்தில் விழித்து கொண்டானே அது போதாதா ?

அப்புறம் எப்போதும் எங்களே யாரும் அதிகம் விரும்பறாலோ அவரே நாமும் விரும்பினா பிரச்சனை இருக்காது சரி தானே நான் சொன்னது ...

M. Azard (ADrockz) said...

அதுவும் சரிதான் அக்கா :)